சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தான் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக இடம் பெற்றார்.
அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில முன்னணி வேகப் பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதால், இவர் அதேத் தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய அணியை பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவரின் பந்து வீச்சில் உள்ள யார்க்கர் முறை அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டது. இவரின் வெறித்தனமான ஆட்டம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அனைத்து விளையாட்டு வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இவர் தன்னுடைய கிரிக்கெட் அகாடமி மூலமாக திறமை வாய்ந்த கிராமப்புற இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக நடராஜன் ஒரு கிரிக்கெட் மைதானத்தை தனது சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் உருவாக்கி உள்ளார். இந்த மைதானத்தில் நான்கு பிச்சுகள், 2 பயிற்சி தடங்கல், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் மினி கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மைதானம் முழுமையாக தயாராகிய நிலையில் இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்களான யோகிபாபு, புகழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவர், செயலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.