கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது! ஈரோட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்..!!
ஈரோட்டில் பவானீஸ்வரர் கோயிலின் தெற்கு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தின் அருகே உள்ள பவானி ஆற்றின் கரையில் பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடந்த 2018 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், பாதிப்படைந்த தெற்கு பகுதி சுற்றுச்சுவரை நீக்கிவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி 40 லட்சம் செலவில் நடைபெற்றது. முன்பு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுவரின் அடிப்பகுதியில் இருந்த கெட்டியான மண் பரப்பு அனைத்தும் வலுவிழந்த நிலையில், இன்று காலை மீண்டும் தெற்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கோயிலின் பாரம்பரியமான சிலைகளான 63 நாயன்மார்களின் சிலைகளின் சேதமடைந்துள்ளன. யாரும் எதிர்பாராத விதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. விபத்தினை பற்றிய தகவல் அறிந்தவுடன் கோயிலுக்கு சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆய்வும் செய்யப்பட்டது.