குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

0
68

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிஏஏ போராட்டம் நடைபெற்றது. இன்னும் தமிழ்நாடு மற்றும் சில இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில்;

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட வன்முறை இந்தியாவிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் குஜராத்தில் எப்படி வன்முறை நடத்தினார்களோ அதேபோல் டெல்லியிலும் நடத்தியுள்ளனர்.

இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பாராளுமன்ற கூட்டத் தொடரில் டெல்லி வன்முறை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம். மேலும் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து நடத்த கோரிக்கை வைப்போம்.

தமிழகத்தின் சட்டசபையில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி -க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் தவறான முயற்சிக்கு ஆளும் அதிமுக அரசு உடன்படக் கூடாது என்றும் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்பதை பாஜக உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

author avatar
Jayachandiran