சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ் நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.