மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !!
மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற பகுதியில் மதநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் என 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தேகாபம் அப்மனோலா என்ற கிராமத்தின் பிரார்த்தனை இல்லம் ஒன்று உள்ளது. அங்கு குறிப்பிட்ட மதத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தினைச் சேர்ந்த ஏராளமான மக்கள், குழந்தைகள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதில் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சைப் பயறு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. அனைவரும் ஆவலுடன் பிரசாதம் சாப்பிட்டுள்ளனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பலருக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்படவே அந்த கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும், செவிலியர்கள் அடங்கிய குழு விரைந்துச் சென்றது.
உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களை அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டு முதல் உதவி செய்யப்பட்டு பின் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ள சிலர் தேமாஜி, சிலபதாரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.