இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது?
இந்திய நாடு முழுவதும் சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் 100 லிருந்து 140 வரை விற்பனை ஆகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பால் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வால் மக்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மளிகை பொருட்களில் பாசி பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அரிசி என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதில் அனைத்தையும் விட சீரகத்தின் விலை அதிகமானது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் இந்த சீரகத்தின் விலையானது ரூ.200 மற்றும் ரூ. 250 என்று விற்ற நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.600 – ரூ.650 என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும், துவரம் பருப்பு ரூபாய் 118 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூபாய் 160 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பு முன்பு ரூபாய் 112 க்கு விற்று வந்த நிலை மாறி தற்போது கிலோ ரூபாய் 124 க்கு விற்கப்படுகிறது. இதைப்போலவே அனைத்து மளிகைப்பொருட்களின் விலையும் தாறு மாறாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், உணவு பாதுகாப்பை உயர்த்த மத்திய அரசானது குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு மற்றும் சாதாரண கிடங்கு அமைப்பதற்கு 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மானியம் அளித்து வருகிறது.
இந்த கிடங்குகளை பயன்படுத்தி உணவுப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அனைத்து அடிப்படை தேவைகளான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததை அடுத்து தற்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயரந்துள்ளது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.