குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!! மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!
18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் அரசோ இல்லை ஆழ்துளை கிணறுகளின் உரிமையாளர்களோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்காக இருப்பதே இந்த ஆழ்துளை கிணறு மரணங்களுக்கு காரணம்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னால் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தீபாவளி பண்டிகை அன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது, நமது அனைவரின் நெஞ்சில் மாறாத வடுவாக உள்ளது. இருப்பினும் இன்னும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுவதும் அவர்களை காப்பாற்ற முடியாமல் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் வருகிறது. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது என துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி லலித் சிங் டங்கூர் தெரிவித்தார்.
இன்று மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் ஆழ்துளை கிணற்றில் அந்த பெண் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வானது மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கஜாரி பார்கேடா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தின் பொறுப்பாளர், மருத்துவக் கல்வித்துறை மந்திரி விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் . அதைத் தொடர்ந்து, தற்போது அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.