பாமக யாருடன் கூட்டணி? அன்புமணி போட்ட புது கணக்கு..
கடந்த மாதம் பாமக சார்பில் நடத்தப்பட்ட என்.எல்.சி.,போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவை சேர்ந்த 18 பேரை நேற்று அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்தபொழுது அன்புமணி அவர்கள் கூறியது,
நாங்கள் காவிரி டெல்டாவில் எந்த ஒரு நிலக்கரி சுரங்கமும் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன முதல்வர் அவர்கள் தற்பொழுது என்.எல்.சி.,தொடங்க உள்ள 3 வது சுரங்கப்பாதை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் அந்நிறுவனத்தின் முயற்சிக்கு அவரும்,அவரது அரசும் துணை போகிறது.
மேலும் இந்த என்.எல்.சி.,பிரச்சனை அன்புமணி பிரச்சனையோ,பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சனையோ கிடையாது.இந்த கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடக்கின்ற பிரச்சனை,மண் சம்மந்தமான பிரச்சனை,விவசாயிகள் சம்மந்தமான பிரச்சனை,தமிழ்நாட்டின் வளர்ச்சி சம்மந்தமான பிரச்சனை என்றார்.மேலும் என்.எல்.சி., நிர்வாகத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த அவர் இது தமிழக அரசின் வேலை கிடையாது என்றார்.
நெல் முப்போகம் விளையும் மண்ணை அழிக்கின்ற ஒரு மனநிலையில் என்.எல்.சி., இருக்கிறது.மேலும் அதற்கு உடந்தையாக ஆளும் திமுக அரசு இருப்பதினால் விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்கு இனி தகுதி கிடையாது.
மேலும் ஒருபுறம் வேளாண் பட்ஜெட் போட்டு விட்டு மறுபுறம் விவசாய நிலத்தை அபகரித்து அதை அழிப்பதற்கு இந்த ஆளும் அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனை பற்றிய புரிதல் இதற்கு முன் மக்களிடம் இல்லாமல் இருந்த நிலையில் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது.
மேலும் நல்ல அரசாக இருந்தால் விவசாயிகளின் மனநிலைமையை புரிந்து மதித்திருக்கும்.இந்த உணர்வை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் என்ன நிர்வாகம் நடத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.மேலும் தமிழகத்தை ஆளும் இந்த அரசு கார்ப்பரேட் நிர்வாகம் பக்கம் தான் இருக்கின்றதே தவிர விவசாயிகள் பக்கம் இல்லை என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் சாதாரண வழக்கிற்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை என்பது நியாயமற்றது என்று அப்போதே கருத்து தெரிவித்திருந்தேன். இந்நிலையில் தற்போது அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று வந்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்.மேலும் ராகுல் காந்தி வழக்கிற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு,2024 ஆம் ஆண்டு வர இருக்கும் மக்களவை தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிப்பதாக தெரிவித்த அன்புமணி அவர்கள் தமிழக்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றார்.மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று அவர் தெரிவித்தார்