உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் சில வாரங்களில் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில் அதிபர் டிரம்பின் மகளும் அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பாரத பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்படும் மன சோர்வை போக்க நித்ராஸனா என்ற யோகாசனத்தை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தானும் சோர்வடைந்து உள்ளதாகவும், தனக்கும் இந்த ஆசனம் உபயோகமாக இருக்கும் என்று அதற்கு நன்றி கூறி பதில் பதிவிட்டிருந்தார்.