நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்
நாளை இரவு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் மேலும் கொரோனோ என்ற இருளை அகற்ற டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை எரியவிடுமாறு பிரதமர் நரேந்திரமோடி மோடி கூறினார். இதனையடுத்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியது.
இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது; நாளைய இரவு வீட்டில் மின்விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகள் எரிய வேண்டும். இதனை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதிபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வீட்டில் இருக்கும் பிற மின்சாதன உபகரணங்கள் வழக்கம்போல செயல்பட வேண்டும். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் மின் விளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது; நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. மின் விளக்குகளை அணைக்கும்போது மின் சாதனத்தில் எந்த சிக்கலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கை அணைக்கும் போது வழக்கம்போல மற்ற மின்சாதனங்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் அறிவிப்பை ஏற்று மின்விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்தால் மின்விநியோக சிக்கல் அல்லது மின்சாதன வழித்தடங்களில் கோளாறு ஏற்படலாம் என்று மின்சாரத்துறை நிபுணர்கள் பல்வேறு கருத்துகள் வெளியிட்ட நிலையில் மத்திய மற்றும் தமிழக மின்துறை அமைச்சகங்கள் விளக்கம் அளித்துள்ளன.