மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!
அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். கோடிக்கணக்கில் இந்த மாநாட்டுக்கு செலவிடப்பட்டதாகவும் ஆனால் இந்த மாநாடு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்த 24 மணி நேரத்துக்குள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உயிரிழந்தோர்க்கு தலா 6 லட்சம் ரூபாய் கட்சி சார்பாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
எடப்பாடியார் அவர்கள் தனது அறிக்கையின் வாயிலாக, கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த திரு. பொன்னுசாமி, திரு. சென்னையன், திரு. கதிரேசன், திரு. பழனிச்சாமி, திரு. மாரிமுத்து, திரு. வாசுதேவன், திரு. கடற்கரை மற்றும் திரு. சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அவர்களது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதே போல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 1,50,000/- ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்றும் எடப்பாடிக்கு பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அதிமுகவினர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.