ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க வேண்டுமென்ற முனைப்பில் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பேசினார்.
அதில் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க தரமான முறையில் நவீன பள்ளிகள் உருவாக்கப்படும்.மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதோடு அவை தங்கு தடையின்றி 24 மணி நேரமும் விநியோகம் செய்யப்படும். இதையடுத்து வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான நிலுவையில் இருக்கும் அனைத்து மின் கட்டணங்களும் ரத்து செய்யப்படும்.இதையடுத்து மருத்துவமனைகளில் ரூ.20 லட்சம் செலவில் பரிசோதனைகள்,அறுவை சிகிச்சைகளுடன் இலவச சிகிச்சையும் வழங்கப்படும்.தற்பொழுது நாட்டில் பெரும் பிரச்சனையாக வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகின்றது.இதனால் படித்த இளைஞர்கள் வேலையின்றி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகையாக அரசு சார்பில் வழங்கப்படும்.
மேலும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சில கட்சிகள் தேர்தலின்போது வாக்குறுதிகளை வெளியிட்டு பின்னர் அவற்றை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டு விடுகின்றன.இவ்வாறு மக்கள் பணத்தில் ஊழல் செய்து வரும் மற்ற கட்சிகளின் நடுவில் என் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றது.ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி.உதாரணத்திற்கு டெல்லி,பஞ்சாப் மாநிலங்களை பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது உங்களுக்கு புரிய வருமென்று
பேசினார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் தற்பொழுது இறங்கியுள்ளது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது மத்திய பிரதேசத்தில் புதிதாக ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
மேலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகின்றது.இந்நிலையில் இம்முறை வெற்றி யாருக்கு சாதகமாக வரும் என்பதை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.