பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?
திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். இதனை எதிர்த்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிவக்குமார் என்பவர் பட்டியலினத்தவர் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் தனி ஊராட்சி என்ற அறிவிப்பை ரத்து செய்திட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு ஆரம்ப நிலையிலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கூறி இந்துமதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகவல் அறிந்து கடந்த 3ம் தேதி அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பி.காத்தவராயன், வே. குபேந்திரன் மணிமாறன் ஆகியோரும் கடந்த 6ம் தேதி வழக்கறிஞர்கள் மருதன், சிவா, பாலகுமார் ஆகியோருடனும்
இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகியோர்களை சந்தித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி சனிக்கிழமை அன்று மாலையில் இருந்து இந்துமதி அவர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரது கணவர் பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாநில அரசு உடனடியான தலையீடுகளை மேற்கொண்டு இந்துமதியைக் கண்டுபிடித்து பதவி பிரமாணம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அப்பெண்ணை புறக்கணிப்பது சரி இல்லையே என்று சமூக ஆர்வலர்களுக்கு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் இந்துமதிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.