மணமணக்கும் “சாம்பார் தூள்” இனி வீட்டிலேயே செய்யலாம்!! தெளிவான விளக்கம் இதோ!!
பருப்பு,காய்கறி கூட்டு உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் சாம்பார் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த சாம்பார் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*புழுங்கல் அரிசி – 50 கிராம்
*கடலைப் பருப்பு – 50 கிராம்
*சீரகம் – 50 கிராம்
*மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
*வரமிளகாய் – 75 கிராம்
*உளுந்து – 50 கிராம்
*மிளகு – 50 கிராம்
*வெந்தயம் – 10 கிராம்
*கடுகு – 10 கிராம்
*பெருங்காயம் – சிறிதளவு
*கருவேப்பிலை – 5 கொத்து
*கொத்தமல்லி விதை – 100 கிராம்
*உப்பு – சிறிதளவு
*எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:-
1)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் புழுங்கல் அரிசி 50 கிராம் சேர்த்து வறுக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.
2)பிறகு அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.அதை அரசி வறுத்து வைத்துள்ள தட்டில் சேர்த்து கொள்ளவும்.
3)பின்னர் கடையில் உளுந்து,வெந்தயம்,சீரகம்,மிளகு கருவேப்பிலை,பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து கொள்ளவும்.பிறகு இதை அந்த தட்டில் சேர்க்கவும்.
4)அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காம்பு நீக்கிய வரமிளகாய் 75 கிராம் சேர்த்து வதக்கவும்.அதை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கொள்ளவும்.மிளகாய் வறுக்கும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து கொண்டால் மிளகாய் காரம் அடிக்காது.
5)பிறகு கடாயில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆற விடவும்.
6)அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் இரண்டு தேக்கரண்டி குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூளை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
7)பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.சாம்பார் தூள் இந்த முறையில் செய்தால் குழம்பு மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.