உலகமே கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி லட்ச கணக்கில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு பெரும்பாலும் மூச்சு விடுதலில் சிரமம், இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும் மருத்துவமனை அணுகி உரிய சிகிச்சையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமலேயே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இதே போன்று தான் தங்கள் நாட்டிலும் எந்த அறிகுறியும் இல்லாமல் நோய் பரவுகிறது என்று இந்தியா உட்பட பல நாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று புதிய அறிகுறிகளுடன் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து ஒன்று பரவி வருகிறது. அதாவது நோய் தொற்று ஏற்பட்டவருக்கு கால்களின் விரல்களில் ‘நகச்சுத்தி’ போன்ற அறிகுறி பலருக்கு தென்படுவதாக கூறுகின்றனர்.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.