Kerala Style Recipe: பாலாட கேரளா பாயாசம் – அதிக சுவை மற்றும் வாசனையுடன் செய்வது எப்படி?
நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அவல் பாயசம், அரிசி பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த பாலாட பாயாசம். அரசி வைத்து, உலர்த்தி அரைத்து தயாரிக்கப்டும் இந்த பாயசம் கேரளா மக்களின் விருப்ப இனிப்பு வகை ஆகும்.
தேவையான பொருட்கள்
*அரிசி – 1 கப்
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் பால் – 3 கப்
*சர்க்கரை – 1 1/2 கப்
*முந்திரி – 1 தேக்கரண்டி
*திராட்சை – 1 தேக்கரண்டி
*நெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பவுலில் 1 கப் அளவு அரசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற விடவும்.
பின்னர் இதை நன்கு உலர்த்தி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பொடித்து வைத்துள்ள அரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பின்னர் வாழை இலையில் ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றி தேய்த்து விட்டு வாழை இலையை சுருட்டி கொள்ளவும். இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து கொள்ளவும்.
இவற்றை வாழை நாரில் கட்டி, இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் அவற்றை எடுத்து கத்தியால் கட் செய்து வைத்து கொள்ளவும். இப்பொழுது பாலாட தயார்.
அடுத்து இந்த’பாலாடவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டில் போடு உலரவைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
அடுத்து அதே பாத்திரத்தில் 1 கப் கெட்டி தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். அதனோடு 1 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். பின்னர் 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு தயார் செய்து வைத்துள்ள பாலாடயை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் எடுத்து வைத்துள்ள இரண்டாவது தேங்காய் பால் 2 கப் சேர்த்து கொதிக்க விட்டு வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு இறக்கவும். இவ்வாறு செய்தால் பாலாட கேரளா பாயாசம் சுவையாக இருக்கும்.