புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!
காவிரி கடை முக தீர்த்தவாரி திருவிழா மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு நாளை 16-11-2023 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புண்ணிய நதிகளில் மிகவும் முக்கியமானது காவிரி. கர்நாடகாவில் உற்பத்தி ஆனாலும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பாய்ந்து வளப்படுத்தி வருகிறது. காவிரி நதியை மையப்படுத்தி பல்வேறு திருவிழாக்கள், நடைபெற்று வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றது.
மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் காவிரி துலா கட்ட ஸ்தானம் அக்டோபர் மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும் துலா கட்டத்தில் தீர்த்தம் கொடுக்கும் உற்சவம் நடைபெறுவது பிரபலமான ஒன்று.
தங்களது பாவங்களை நீங்க பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடியதால் கருமை நிறம் அடைந்தது. இதனால் கங்கை உள்ளிட்ட ஜீவநதிகள் சிவபெருமானிடம் சென்று பிரார்த்தனை செய்ததாகவும் அப்போது சிவபெருமான் அவர்கள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள வரம் அளித்துள்ளார்.
இதன்படியே கங்கை உள்ளிட்ட ஜீவநதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி, சிவபெருமானை வழிபட்டு தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஐப்பசியில் துலா கட்டத்தில் காவிரியில் நீராடினால் நமது பாவங்கள் போக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமில்லாமல் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலன் கிடைக்கும் எனவும் நம்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் ஐப்பசி மாதம் முதல் நாளிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
மயிலாடுதுறையில் நடைபெறும் இந்த தீர்த்தவாரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடுவார்கள். இதன் காரணமாக காவிரி கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.