பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா?

0
242
#image_title

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா?

நம் நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கின்றது. தேர்தல் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்பொழுதே கூட்டணி பேச்சுவார்த்தை, பொது கூட்டம், பிரச்சாரம் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி… காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்று தேசிய அளவில் 2 அணிகள் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகள்… என்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற கடுமையான போட்டி நிலவுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக… தனி கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று வெளியில் பேசப்பட்டாலும் கூட்டணிக்குள் ஒரு பூகம்பமே… வெடித்து வருகிறது என்பது தான் உண்மை. கூட்டணியில் திமுகவிற்கு அடுத்து செல்வாக்கு உள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்… ஆனால் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதியை திமுக தலைமை ஒதுக்கவில்லை இதனால் இரு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மேலும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த சீட்களை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க மேலிட பாஜகவானது அதிமுகவை எப்படியாவது கூட்டணிக்குள் இணைத்து விட வேண்டும் என்று தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை வைத்து அதிமுகவிற்கு தூது அனுப்பி வருகிறது. ஆனால் அதிமுகவோ பாஜக உடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக இருக்கின்றது.

அதேசமயம் பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பாமக இந்த முறை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தது.

இதற்கு முன் பாமக உடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை பாஜக ரகசியமாக நடத்தியாக சொல்லப்படுகிறது. ஆனால் பாமக கேட்ட தொகுதிகளை விட பாஜக குறைவான தொகுதிகளை ஒதுக்கும் நோக்கத்தில் இருப்பதால் அக்கட்சியுடன் பாமக… கூட்டணி வைப்பதில் சந்தேகம் தான் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கின்றது.

இன்று திண்டிவனம், தைலாபுரத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்தது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பாமக கேட்ட தொகுதிகளை வழங்க அதிமுக முன் வந்துள்ளதா என்ற தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே கூட்டணி… என்று பாமக உறுதியாக இருக்கும் நிலையில் அதிமுக அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறதா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்த பாமக இந்த முறையும் அதிமுக உடன் கூட்டணி வைகுக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது.

Previous articleஇந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleதையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!