கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!
கோடை காலம் தொடங்கி விட்டாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர தொடங்கி விடும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை விலை இல்லை என்று கூறி சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி சென்ற தக்காளிகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது.
அதாவது கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வெறும் 3 டன் தக்காளி மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், வழக்கமாக மே மாதத்தில் தான் விளைச்சல் குறைந்து வரத்து குறையுமாம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே விளைச்சல் குறைந்து காணப்படுகிறது என வியாபாரிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல இந்த கோடை காலம் முடிவதற்குள் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ 7 முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது தக்காளி கிலோ 26 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் அடுத்த சில வாரங்களிலேயே தக்காளி விலை சதம் அடித்து விடும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே தக்காளி வெங்காய விலை இரட்டை சதம் அடித்து அன்றாட தேவைக்கு கூட மக்கள் பயன்படுத்த முடியாமல் அல்லல்பட்ட நாட்கள் உண்டு. இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.