ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் ரோடு ஷோவை முடித்து விட்டு இன்று வேலூரில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி பங்கேற்றிருந்தார்.
பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு திமுகவினரை மோடி விமர்சனம் செய்திருந்தார்.
அதன்படி அவர் பேசியதாவது, “திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தான் கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. ஆனால் தற்போது தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். கட்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து மீனவர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே துரோகம் செய்து விட்டார்கள்.
மேலும், பெண்கள் இழிவுப்படுத்துவதில், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு கைகோர்த்து வேலை செய்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இவர்கள் எப்படி எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள்” என மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.