தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??
நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே பதறிய தொண்டர்கள் உடனடியாக அவரை குடியாத்தம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து தற்போது மன்சூர் அலிகானின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.
இந்த தேர்தலுக்காக மன்சூர் அலிகான் கடுமையாக உழைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.