ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

0
165
Veda Nilayam-News4 Tamil Online Tamil News1
Veda Nilayam-News4 Tamil Online Tamil News1

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிப்பதற்காக நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களை போலவே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெ.தீபா உள்ளிட்டோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டத்தை அண்மையில் பிறப்பித்தது.

vedha house - updatenews360

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைக்கபட்டிருந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தது. அதில், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு பதிலாக, முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களின் ஒரு பகுதியை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கலாம் என்றும் கூறிய நீதிமன்றம், மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் இந்த சொத்துக்களின் 2 ஆம் நிலை வாரிசுகள் என்றும் தெரிவித்தது.

மேலும் இந்த தீர்ப்பின் மூலமாக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – தமிழக அரசு
Next articleதனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்பு