2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பட்டியலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
.
மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ ராசா, ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த ஒதுக்கீட்டில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்காக பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்பதை திருத்தம் செய்யக்கோரி கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நொக்கில் மட்டுமல்லாமல் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது. எனவே ஏல முறைக்கு பதிலாக நிர்வாக நடைமுறைகள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த மனுவை ஏற்க போதிய காரணங்கள் இல்லை என்று கூறி, விசாரணைக்கு பட்டியலிட முடியாது என்று உச்ச நீதிமன்ற பதிவாளர் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளார்.