புயல் எச்சரிக்கையின் காரணமாக வானிலை நிலவரத்தினை பொருத்துதான் விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாக தெரிவித்து இருக்கிறது. இன்று மற்றும் நாளை விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை புயலாக மாற வாய்ப்புள்ளது எனவும், இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 30 தேதி காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பினால் சென்னை விமான நிலைய நிர்வாகம் வானிலையைப் பொறுத்தே விமான சேவைகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்களுடைய விமானங்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொண்டதன் பின் விமான நிலையங்களுக்கு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.