சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஃப்ளோரிடா கடலில் பத்திரமாக தரையிறங்கினர்.
இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் ஃப்ளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் வந்த சக விண்வெளி வீரர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் இருப்பதாக, நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ”140 கோடி இந்தியர்கள் பெருமை அடைவதாகவும், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் இருந்தாலும் எங்களின் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள்” என்றும் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க சுனிதா வில்லியம்ஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு சுனிதா, விண்வெளிப் பயணம் மேற்கொண்டபோது, அப்போதும் குஜராத்த்தில் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால், குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி சுனிதா வில்லியம்ஸ் வருகை தொடர்பாக எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.
குஜராத்தை சேர்ந்தவர்களின் சாதனைகளை அப்போதைய முதல்வர் மோடியின் அரசு பெருமையாக கொண்டாடி வந்த நிலையில், சுனிதா வருகைக்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு சுனிதா வில்லியம்ஸின் குடும்பம் தொடர்பான அரசியல் நிகழ்வுகள் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதாவது, குஜராத் முதல்வராக கோசுபாய் இருந்தபோது, சுனிதா வில்லியம்ஸின் உறவினர் ஹரேன் பாண்டியா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு மோடி முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில், ஹரேன் பாண்டியா வருவாய்த்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனால், மோடிக்கும் – ஹரேன் பாண்டியாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இதையடுத்து, தனது அமைச்சர் பதவியை ஹரேன் பாண்டியா ராஜினாமா செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனது மகன் கொலைக்கு மோடிதான் காரணம் என ஹரேன் பாண்டியாவின் தந்தை விட்டல் பாண்டியா குற்றம் சாட்டினார். சுனிதா வில்லியம்ஸ் 1998இல் குஜராத் வந்தபோது ஹரேன் பாண்டியாவின் தேர்தல் வெற்றியில் பங்கேற்ற நிலையில், அவர் கொலை செய்யப்பட்டபோது விண்வெளி பயிற்சியில் இருந்ததால், இறுதிச்சடங்கில் சுனிதா வில்லியம்ஸால் பங்கேற்க முடியவில்லை.
இதற்கிடையே, சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வந்திருந்த போது முதலமைச்சராக மோடி அவரை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் ஹரேன் பாண்ட்யா அவரது ஆட்சி காலத்தில் கொலை செய்யப்பட்டதால், அவருடன் புகைப்படம் எடுக்க சுனிதா மறுத்துவிட்டார் என்றும் அப்போதைய சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.