தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா இல்லையா என இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனியே களம் காணும் சூழல் நிலவி வருகிறது. இதில் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகளை நேரிடையாக எதிர்த்து விமர்சனம் செய்தார்.
அதே போல தங்களுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அறிவித்து கூட்டணிக்கு தயாராக உள்ளதை தெளிவுப்படுத்தினார். திமுக பாஜக கட்சிகளை விமர்சனம் செய்ததால் அக்கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதே போல அதிமுகவை எங்கயும் விமர்சனம் செய்யாத காரணத்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருந்ததாகவும், இதற்காக சில கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளான ஆட்சியில் பங்கு, முதல்வர் பதவி உள்ளிட்ட காரணங்களால் இழுபறியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் நிலைமையை சுதாரித்து கொண்ட பாஜக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனால் அதிமுக தவெக கூட்டணியானது பேச்சுவார்த்தைகளுடன் முடிந்து போனது. இந்நிலையில் தான் தவெக தனியாக போட்டியிடுமா அல்லது அறிவித்தது போல கூட்டணி அமைத்து போட்டியிடுமா என விவாதங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. உயர்மட்ட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அருண்ராஜ் உள்ளிட்டோருடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல கட்ட ஆலோசனைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில திமுக கூட்டணி பக்கம் போகலாம் என்று கொடுத்த ஆலோசனையின் பேரில் எதாவது ஒரு மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதுகுறித்து பேச முதல்வரிடம் அனுமதி வாங்கி அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலரும் பரந்தூர் விமான நிலைய பிரச்சனையை கையில் எடுக்கலாம் என கூறியதால் இது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பானது பரந்தூர் விமான நிலையம் சார்ந்த பிரச்சனைக்காக என வெளியில் தெரிந்தாலும், உள் அரங்கில் திமுக கூட்டணிக்குள் தவெக நுழைவதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன் தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில் பின்னர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதே போல விஜய் திமுகவை விமர்சனம் செய்திருந்தாலும் கட்சியின் நலன் கருதி திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கு வழக்கம்போல மற்ற திமுக கூட்டணி கட்சியினர் கூறும் பாஜக எதிர்ப்பை காரணமாக கூறிவிடலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.