
சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று ஊர் பொதுமக்கள், அஜித் குமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் விஜய், நயினார் நாகேந்திரன், சீமான் போன்ற முன்னணி அரசியல் தலைவர்கள் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அஜித் குமாரை கொலை செய்த அந்த காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அஜித் குமார் ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வேங்கைமாறன், திமுகவை சேர்ந்த மகேந்திரன், திருபுவனம் திமுக நகர செயலாளர் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி போன்றோர் அஜித்குமாரின் குடும்பத்துடன் பேரம் பேசியுள்ளனர்.
உங்களுக்கு 50 லட்சம் பணம் தருகிறோம், வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் அஜித்குமாரின் உடலை வாங்கிவிட்டு சென்று விடுங்கள் என்று பேரம் பேசியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று அஜித்குமாரின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். நீதிமன்றத்தில் கூட திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எங்களிடம் 50 லட்சம் பணம் தருகிறோம் என்று பேரம் பேசினார்கள் என்ற தகவலையும் அஜித்குமார் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.