சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் பின்னணியில் உள்ள நகை காணாமற்போன விவகாரம் தொடர்பாக நகையின் உரிமையாளர் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எப்படி நடந்தது?
மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிக்கிதா, தனது வயதான தாயுடன் கோவிலுக்கு வந்தபோது, தாயின் உடல்நிலை காரணமாக தங்க நகைகளை கழற்றி காரில் வைத்துவிட்டு, சாமி தரிசனம் செய்துள்ளார். காரை தற்காலிக காவலாளி அஜித் குமார் நிறுத்தி, சக்கர நாற்காலி கொண்டு வந்ததையும், பின்னர் சாவியை மீண்டும் வழங்கியதையும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
அவர்கள் திரும்பிச் சென்றபின், சிறிது தூரம் சென்றபோது, பையில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. உடனே திருப்புவனம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து , அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை விசாரணையின் போது தாக்கியதாக கூறப்படுகிறது, பின்னர் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரின் தாக்குதல்?
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்த அஜித் குமாரின் உடலில் மொத்தம் 18 இடங்களில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் பதிவாகியுள்ளது. முகம், நெற்றி, புஜம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்ட காயங்களும் இருந்துள்ளன. இது, போலீசாரின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கான விசாரணையை CB-CID மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புகார் அளித்த பெண்ணின் பக்கம் என்ன?
இதனையடுத்து புகாரளித்த பெண் அளித்த பேட்டியில், “நாங்கள் சாமி தரிசனம் செய்து விட்டு காரை கிளம்பினோம். பிறகு நகை இல்லாதது தெரிய வந்தது. நாங்கள் யாரையும் தாக்கவில்லை. போலீசாரிடம் இது குறித்து புகாரே அளித்தோம். FIR போடப்பட்டதா என தெரியவில்லை,” என அந்த பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகாரியின் உறவினரா?
மேலும், நிக்கிதா என்ற பெண் ஒரு IAS அதிகாரியின் நெருங்கிய உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் போலீசார் கடுமையாக விசாரணையை மேற்கொண்டிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம், தமிழகத்தில் காவல்துறையின் நடத்தை மற்றும் விசாரணை முறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடர்கிறது.