சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ரோஷனின் அறையை சோதனை செய்தபோது, அவர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “என் காதுகளில் யாரோ அழைப்பது போன்ற ஒலி தொடர்ந்து கேட்கிறது” என்று குறிப்பிட்டிருந்ததுடன், குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரும் வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
ரோஷனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோஷன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள “காதுக்குள் ஒலி கேட்பது” என்ற நிலையை விளக்கி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செவிப்புல மாயை (Auditory Illusion) என்பது உண்மையில் இல்லாத ஒலியை மூளை தவறாக உணர்வதாகும். ஒலியின் அதிர்வுகள் அல்லது அதன் மாற்றங்களை மூளை சரியாக செயலாக்க முடியாதபோது, இதுபோன்ற அனுபவம் ஏற்படலாம்.
சில நேரங்களில் ஹாலுசினேஷன் (Hallucination) எனப்படும் கடுமையான மனநலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெளி உலகத்தில் எந்த ஒலியும் இல்லாவிட்டாலும், மூளை தானாகவே அந்த ஒலியை உருவாக்கும் நிலை இதுவாகும்.
ரோஷன் அனுபவித்த இந்த பிரச்சினை, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மனநலக் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய அறிகுறிகள் தோன்றும் போது அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்