ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

0
70

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த, கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்துள்ளன. வட-தென் கொரியாக்கள் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது.

 

கத்தார், 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் போட்டியில் பங்கேற்று, இரண்டு முறையும் அதன் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதில் தனக்கு நல்ல அனுபவமும் நற்பெயரும் உள்ளதாக, கத்தார் தெரிவித்தது. இருப்பினும், ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலக்கட்டத்தில் கத்தாரின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் போட்டியை நடத்துவதில் சிக்கல்கள் உருவாகலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

 

மிதமிஞ்சிய சூடு காரணமாக, அங்கே நடைபெறும் போட்டிகளைக்காணச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை. அப்படி கத்தார் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த அனுமதி பெற்றால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடைபெறும் முதலாவது ஒலிம்பிக் போட்டியாக அது இருக்கும்.

 

கத்தார் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்துகிறது. இந்த ஆண்டு தோக்கியோவில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.