கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்த வழக்கில் அருண் கிருஷ்ணன் என்பவர் கைதாகியுள்ளார்.
கோவையில் சுந்தராபுரம் எல்ஐசி ஏஜண்ட் காலனின் முன்பு உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ஆம் தேதி
மர்ம நபர்கள் சிலரால் சிலையின் மீது காவி சாயத்தை மேலே வீசிய அவமதித்திருந்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட திராவிட கழகத்தின் தலைவர் சந்திரசேகரன் அளித்த புகாரின்படி 151, 153(ஏ)1(பி), 504 ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
விசாரணையின் இறுதியில், கோவை போத்தனூரைச் சேர்ந்த, பாரத் சேனா என்ற அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளரான அருண் கிருஷ்ணன் என்ற 21 வயதேயான இளைஞர் காவல்துறையிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து குனியமுத்தூர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரிக்கும் போது, அவர் முன்னதாக நடந்த யூட்யூபில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் கடவுள் முருகனை இழிவு படுத்தியதால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி சிலையின் மீது அவமதிப்பு செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.
இதன்படி அவர் பொது அமைதிக்கு சீர் குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்ட அருண் கிருஷ்ணனை கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் அவர் குனியமுத்தூர் காவல்துறையில் நேற்று ஜூலை 28 சரணடைந்தார். இவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான ஆணையை சிறைத்துறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.