ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்
வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதமாதங்களாக கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நகைக் கடைகளை திறக்க முடியாமல் இருக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற நினைத்த விஜயகுமார், பல அற்புதமான மெழுகு ஓவியங்களை வரைந்துள்ளார். அந்த ஓவியங்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
முதலில் காகிதம் கொண்டு பென்சிலால் ஓவியத்தை வரையும் விஜயகுமார், அதன் பிறகு அதன்மேல் கண்ணாடியை வைத்து மெழுகை உருக்கி துளித்துளியாக அதன் மீது ஊற்றி ஊசி மற்றும் பிளேடு கொண்டு செதுக்கி அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இதில் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியங்கள் மட்டுமின்றி, சிவன் – பார்வதி, கிருஷ்ணர்-ராதை, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், குதிரைகள், கடல் உயிரினங்கள், உலகத் தலைவர்களின் உருவம் என பல்வேறு வகையான படங்களை மெழுகை உருக்கி, மிக அழகாகவும் அற்புதமாகாவும் வரைந்துள்ளார்.
ஓவியர் விஜயகுமார் இதுகுறித்து கூறும்போது, எனக்கு ஓவியத்தில் ஆர்வமும் ஆசையும் இருப்பதாக கூறுகிறார். ‘நான் கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்தேன். படிப்பு முடிந்தவுடன் ஓவியம் வரைவதற்கான சூழ்நிலை எனக்கு அமையவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நகைக்கடைகளை திறக்க முடியவில்லை. இதனால், எனக்கு கிடைத்த இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன்.
இதைனைத்தொடர்ந்து, தற்போது மெழுகுவர்த்தியை உருக்கி, அதில் ஓவியங்களை வரைந்துள்ளேன். ஒவ்வொரு ஓவியங்களை வரைய எனக்கு பல மணி நேரம் ஆனது.
தனக்கு தெரிந்த இந்த கலையை, தன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத் தர விரும்புகிறேன்’ என்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். அதில் விஜயகுமார் வரைந்த அப்துல்கலாம் அவர்களின் ஓவியம் சிறப்பு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.