கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த மத்திய அரசு நேற்று முன்தினம் வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. அந்த அடிபடையில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை மூடப்படும். அதே வேளையில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பதற்கு எந்த வித தடையும் இல்லை. திரையரங்கு, நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், மாநாட்டு அரங்கங்கள் போன்றவை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரெயில், சமூக, அரசியல், விளையாட்டு, கலாசார, மத விழாக்களுக்கு அனுமதி இல்லை. யோகா பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் வருகிற 5-ந் தேதி முதல் திறக்க அனுமதி உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மாநிலத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதற்கு தனியாக அனுமதி பெற தேவை இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். ரெயில், விமான போக்குவரத்து போன்றவை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இயக்க அனுமதிக்கப்படும். இந்த வழிகாட்டுதல் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.