நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல்ரத்னா’ மற்றும் ‘அர்ஜூனா’ விருதும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றுபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருதும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ‘ஜனாதிபதி மாளிகையில் இருந்து விளையாட்டு விருது விழா தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை. தகவலுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம். ‘இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருது வழங்கும் விழா கால தாமதமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதிக அளவில் குவிந்து இருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதுக்குரிய நபரை தேர்வு செய்வது கடினமான இலக்காகும்.
இந்த பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் நிச்சயம் விருது வழங்கப்படும்.
தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்படுவது மறுக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று மத்திய விளையாட்டு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விருது வழங்கும் விழா தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி (இந்திய ஆக்கி ஜாம்பவான் தயான்சந்த் பிறந்த நாள்) டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவது வாடிக்கையாகும். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா குறிப்பிட்ட தேதியில் அரங்கேறுமா? என்பது பெருத்த கேள்விக்குறியாகி இருக்கிறது.