நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள அலுவா என்ற பகுதியில் 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது குழந்தையின் வயிற்றில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இருப்பினும் அந்தக் குழந்தையை கரோனா பாதிப்புள்ள பகுதியிலிருந்து வந்ததால், அந்தக் குழந்தைக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து பேசிய அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தால் குழந்தையை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆனாலும் அங்கு சென்றும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காததால் ஆலப்புழா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கும் மருத்துவர்கள் சரியாக கவனிக்காமல், குழந்தைக்கு பழங்கள் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இறுதி வரை யாரும் சிகிச்சையளிக்காத காரணத்தால், மூச்சுத்திணறல் அதிகமாகி குழந்தையின் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து வெளியான நிலையில் அம்மாநிலத்தில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில், குழந்தை இறந்துள்ள சம்பவம் துரதிஷ்டவசமானது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே புள்ளி கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து விசாரணை செய்து சரியான அறிக்கையை தயார் செய்ய வேண்டுமாறும், குற்றம் நிரூபணம் ஆகும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துள்ள காரணத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.