மிக மிக சுலபமான சுவையான பூரண கொழுக்கட்டை!
வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் மிகச்சுலபமாக பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு தேவைக்கேற்ப
2. உப்பு
3. தேங்காய்ப்பூ
4. ஏலக்காய்
5. வெல்லம்
6. வறுத்த வேர்க்கடலை
7. கருப்பு எள்
செய்முறை:
1.முதலில் கொழுக்கட்டைக்கு தேவையான அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். கடையில் இடியாப்ப மாவு என்று கூட வாங்கிக்கொள்ளலாம்.
2. இப்பொழுது அரிசிமாவை, சட்டியில் நெய் ஊற்றி மாவை சிறிது வறுக்க வேண்டும். மாவு சற்று சூடு ஏறினால் போதும்.
3. மாவுக்கு ஏற்றவாறு சூடான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. மாவு சற்று ஆறியவுடன் தண்ணீரை ஊற்றி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
5. அதனை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பூரணம் தயாரிக்க:
1. வறுத்த வேர்க்கடலை மற்றும் வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு 3 ஏலக்காய் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
2. பின் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய்ப்பூ போட்டு வறுக்கவும். பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். பொடியாக்கி வைத்த கலவையை அதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அடுப்பை அனைத்து விட்டு பூரணத்தை ஆற விடவும்.
கொழுக்கட்டை தயாரிக்க:
1.பூரணத்தையும் கொழுக்கட்டை மாவையும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
2.வாழை இலையை எடுத்து அதில் அரிசி மாவு உருண்டையை தட்டை போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து வாழை இலையை மடித்து வைத்துக் கொள்ளவும்.
3. எவ்வளவு கொழுக்கட்டை செய்கிறீர்களோ அவ்வளவும் வாழை இலையில் மடித்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். மேலும் நல்ல எண்ணற்ற நன்மைகளும் கிடைக்கும்.
4. இட்லி பாத்திரத்தில் அனைத்துப் பூரணத்தையும் வாழை இலையோடு சேர்த்து வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
சுவையான சுலபமான கொழுக்கட்டை தயார்!
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மாதிரியான நன்மையை கொடுக்கும் வாழை இலையில் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைக்கவும்.