கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக அரங்கேறும் இந்த விழா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது. இதன்படி தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். விருது பெறுபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தால் (சாய்) டெல்லி, புனே, சண்டிகார், பெங்களூரு உள்பட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் உள்ள வீடியோகான்பரன்ஸ் வசதி மூலமாக விழாவில் இணைகிறார்கள்.
விருது பெறுபவரின் பெயர் வாசிக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர் இருக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும் என்றும் பாராட்டு பட்டயத்தை ஜனாதிபதி காண்பிக்கும் வீடியோ மையத்தில் உள்ள திரையில் காட்டப்பட்டதும், விருது பெறும் நபர் ஏற்கனவே தனக்கு அருகில் வைக்கப்பட்டு இருக்கும் விருது சின்னத்தை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.