உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சம அளவில் வினியோகிப்பதற்கும் நடந்து வருகிற உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியில் சேரப்போவதில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது. சீனாவின் ராஜதந்திரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு பங்கு இருப்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகையில், “இந்த வைரசை தோற்கடிப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது சர்வதேச கூட்டாளிகளை ஈடுபடுத்தும். ஆனால் ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம்” என குறிப்பிட்டு உள்ளது.