கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. அதேபோல விளையாட்டு துறையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறாத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 – 1 என தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழந்து 231 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கன் 42 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 73 ரன்கள் எடுத்தார்.