மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளது தமிழக அரசு. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ராஜேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியம் ஆகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசால் எழுத்துபூர்வமாக பதிவு செய்திருந்த கருத்துக்களும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக உச்ச நீதிமன்றம், ‘நடப்பு ஆண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது எப்படி சாத்தியம்?’ என்று கேள்வி எழுப்பியது. அதை தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னவென்றால் : “மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்துவது என்பது சாத்தியமில்லை” என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.