தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக
தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தின் ஓட்டுகள் தான் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் வன்னிய சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக கடந்த காலங்களில் வன்னியர் வாக்குகளை பெற அவர்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் மூலமாக இரு கட்சிகளும் தனக்கு சாதகமாக வாக்குகளை பெற்று வந்தன.ஆனால் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் வழியாக உருவான பாமகவின் எழுச்சியால் படித்த இளைஞர்கள் முதல் படிக்காதவர்கள் வரை தற்போதைய அரசியலை கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளதால் இனி பிரித்தாலும் அரசியலை செய்ய முடியாது என்பதை இரு கட்சிகளும் உணர்ந்துள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாக கடலூரில் சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 2019 ல் திறந்து வைத்தார் என்று கருதப்படுகிறது.
அதே போல் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது திமுகவும் வன்னியர்களுக்கு ஆதரவான வாக்குறுதியை வழங்கியது. அதில், தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.ஆனால் அந்த இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருந்ததால் அதிமுக தான் வென்றது.
மேலும் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட,ஏற்கனவே திமுக வெற்றி பெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் அக்கட்சி தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பின்னர் வன்னியர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதியை யாரும் நம்பவில்லை என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது. தேர்தல் நேரத்தில் மட்டும் வேஷம் போடும் திமுகவை வன்னியர்கள் ஒதுக்க தொடங்கிவிட்டார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுகவிற்கு எதிரான இதே நிலைமை நீடித்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவின் வாக்குகள் பிரித்ததால் தோற்றது போல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வன்னியர்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று எண்ணிய திமுக வன்னியர்களின் வாக்குகளை பெற திட்டமிட்டது. இதன் அடிப்படையில் தான் பாமகவுடன் அதிருப்தியில் உள்ள முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு அவர்களின் மகன் கனலரசனிடம் ஆதரவு கேட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு கனலரசன் அவர்கள் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்து உள்ளார். அந்த சந்திப்பின்போது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சொல்லி திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும்,அதற்க்கு ஜெ.குரு வின் மகன் கனலரசன் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
பிறகு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு சென்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வன்னியர் மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவரும் ஆன ஜெ.குரு அவர்களின் வீட்டுக்கு சென்று அவரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.இந்த நிகழ்வு திமுக கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையிலும் வன்னியர் வாக்குகளை பெற உதவும் என்று கட்சி தலைமையால் எதிர்பார்க்கபடுகிறது.
இதே போல் பாமக தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதால் கட்சி பார்க்காமல் பெரும்பாலான வன்னிய மக்களும் இந்த போராட்டத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக வன்னிய மக்கள் தொடர்ந்து பாமகவை ஆதரிப்பதை தடுக்கும் வகையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் பிரச்சாரத்திற்காக சேலம் சென்ற திமுக எம்.பி தயாநிதி மாறன் பாமகவின் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேரம் பேசி வன்னிய மக்களை அடகு வைத்து தேர்தலின் போது,அதிமுகவிடம் பணம் பெற்றதாகவும் அவர்களுடன் கூட்டணி வைக்க திமுகவிடம் பணம் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.தயாநிதிமாறன் இந்த ஆதாரமில்லாத பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் அறிக்கையில் வன்னிய மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை இணைத்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்று திமுக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. ஆனால் திமுகவினருக்கு வன்னிய மக்களின் மீது ஏற்படும் இந்த திடீர் கரிசனத்தை வன்னிய மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும், அதே போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று வாக்குறுதியளித்த திமுக தற்போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பாக நடத்தும் போராட்டத்தை ஏன் விமர்கிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
திமுகவை மக்கள் ஏற்று கொள்வார்களோ இல்லையோ வன்னியர் வாக்குகளை பெற திமுக எடுத்துவரும் தொடர் முயர்சிக்களால் பாமக தரப்பு கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.