பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடந்த அதிகார கோஷ்டி பூசலில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜகவின் துணையுடன் சதி செய்து, ஒபிஎஸ் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது, சசிகலா தனது தீவிரமான முயற்சியால் ஆட்சியையும், கட்சியையும் பாதுகாத்து தனது நம்பிக்கைக்கு உரியவராக கருதி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்குச் சென்றார்.அதன் பிறகு அரசியலில் அவரே எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி விடுதலையாகி தனியார் பண்ணை வீட்டுக்கு வந்ததிலிருந்து சசிகலா அதிமுக கட்சியை மீட்பது பற்றித் தான் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் அவர் தமிழகம் வந்ததும் அதிமுகவில் குழப்பம் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. கடந்த எட்டு நாட்களில் பல்வேறு முக்கிய நபர்களுடன் பேசிய சசிகலா தினகரனுக்கு முக்கியமான அசைன்மெண்ட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சென்னை, மதுரை மற்றும் தென்காசி பகுதிக்குச் சென்று முக்கியமான நிர்வாகிகளை சந்தித்து விட்டு மீண்டும் நேற்று பெங்களூர் வந்தார்.
பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா இன்று தமிழகம் வருகிறார்.இதனையடுத்து ஆளும் அதிமுகவில் எதாவது குழப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.இதுவரை சசிகலாவை நலம் விசாரித்தவர்கள் பலர் அவரை கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து சசிகலாவே சில அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது அதிமுக ஆட்சியை தான் எப்படி காப்பாற்றினேன் என்றும், ஒபிஎஸ் செய்த துரோகத்தை பற்றியும் உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரையில் வழக்கறிஞர்கள் குழுவினர்களுடன் கட்சியை மீட்பது பற்றி சசிகலா ஆலோசனை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் தான் இன்று சசிகலா வருகை டெல்லியை திரும்பி பார்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை என்றால், நான் தான் அதிமுக பொதுச்செயலாளர், அதிமுகவை மீட்க அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சசிகலா பிரச்சாரம் செல்லவும் தயாராகவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.