தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை முதலமைச்சர் வேட்பாளர்களாக திமுகவில் ஸ்டாலின், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் களமிறங்குகின்றனர். பல இடங்களில் முக்கிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்த கமல் ஹாசன், நேற்று காலை வாக்கிங் செல்லும் போதே வாக்கு சேகரிப்பையும் ஆரம்பித்துவிட்டார். மக்களுடன் செல்ஃபி, சிலம்பம் சுற்றுதல் என நேற்று கோவையையே கவர்ந்திழுந்தார் கமல்.
நேற்று சேலம் தாதகாபட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கமல் ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கமல், மக்கள் வாழும் இடம் தான் எனக்கு கோவில், மக்கள் தான் என் கடவுள். அரசியல் தொழில் அல்ல, எங்களின் கடமை என தெரிவித்தார். மூன்றாவது அணி வெற்றி பெற்றதில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். தொடங்கியதே 3வது அணி தான். அது வென்று தான் மற்ற கட்சிகளை வனவாசம் அனுப்பியது. அந்த இரண்டு இலையில் தான் இப்போது இரண்டு பேர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் – ஓபிஎஸை ஜாடையாக விமர்சித்தார்.