தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக SEET தேர்வு ஆகியவை நடத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
கோவையில் தங்கியுள்ள கமல் ஹாசன், காலை வாக்கிங் செல்லும் போது தன்னுடைய தொகுதி மக்களை சந்திப்பது, அவர்களிடம் குறைகளை கேட்டறிவது, தொகுதியை ஆய்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். நம்மவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்க்க குவியும் மக்கள், அவருடன் கூட்டம் கூட்டமாக நின்று தங்களுடைய செல்போனில் செஃல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
அப்படி இன்று காலை கமல் ஹாசன் வாக்கிங் சென்ற படியே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது கூட்டமாக வந்து செல்ஃபி எடுக்க முயன்றவர்களில் ஒருவர் அவருடைய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலை மிதித்துள்ளார். இதனால் அந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கமலுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனராம். ஓய்வெடுக்க வேண்டுமென்றால் பிரச்சாரத்தை கைவிட வேண்டி வரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனராம்.
ஆனால் கமல் எதையும் எளிதில் விட்டுக்கொடுப்பவர் கிடையாது என்ன நடந்தாலும் பிரசாரத்தை தொடருவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.