தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது.
இதற்கு முன்னதாக தமிழில் மிகப்பிரபலமான செய்தி நிறுவனமான புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 வரையிலான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் அதிமுக அரசுக்கு 76-83 வரையிலான இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சராக வரவேண்டுமென பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து தமிழகத்தில் மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் – 4.4%, அமமுக – 3.6%, பிற கட்சிகள் 11.4% வாக்குகளை பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 177 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 49 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் – 3, அமமுக – 3, பிற கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற வாய்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.