முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்கவிருந்த ஆய்வுக்கூடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வெளியூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் தலைமை செயலகத்திற்கு காலையில் வருவதை அவர் வழக்கமாக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய உணவுக்கு அவர் வீட்டிற்கு செல்வார்.
மீண்டும் மாலை வந்து, இரவு அவர் வீடு திரும்புவார். பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தினமும் இரண்டு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். மு.க.ஸ்டாலின் நேற்று 10:15 மணிக்கு முதல்வர் அலுவலகம் வந்துவிட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வேளாண் துறை போன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்பு, முதல்வர் பொது நிவாரண நிதிக்காக நிதியுதவி அளிப்போருடனான சந்திப்பு இருந்தது. ஆனால், நேற்று முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதன் காரணத்தால் ஆய்வுக்கூட்டம் உட்பட முதல்வரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
உடல் சோர்வு காரணமாக முதலமைச்சர் தலைமைச் செயலகம் வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.