தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதில், 7 இடங்கள் கல்வெட்டு ஆராய்ச்சிக்கான ஆய்வாளர் இடங்கள் என்று அவர்கள் கூறினர். கல்வெட்டு தொடர்பாக நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மொத்தத்தில் 86 ஆயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகவும், அதில், தமிழில் 27 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 25,756, கன்னடத்தில் 9400, தெலுங்கில் 7300 இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், தொல்லியல் தரவுகளுடன் ஒப்பிட்டு பாக்கும்போது, தமிழ் கல்வெட்டு குறித்த விவரங்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். மொழிகளுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவலகம் அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழை, திராவிட மொழியாக கருதும் போது, சமஸ்கிருதத்தை ஆரிய மொழியாகத்தானே இருக்க முடியும்? மொழி வாரியாக உள்ள கல்வெட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? வல்லுநர்களின் எண்ணிக்கை எவ்வளவு? காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
நீதிபதி கிருபாகரன் அமர்வு என்றால் கண்டிப்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு, மத்திய, மாநில அரசுகளை திணறடிப்பார் என அனைவருக்கும் தெரிந்ததே! நேற்றும் அப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பி திணறடித்தார்.