பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!
நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 56.தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி தற்போது வரை துணை நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்ரா.இவர் மலையாள திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.தமிழ் சினிமாவில் கே. பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.இவரின் இயற்பெயர் ஸ்ருதி சித்ரா ஆகும்.
மேலும் இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்துப் புகழ்பெற்றதால் நல்லெண்ணெய் சித்ரா என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இவர் மலையாளம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.சித்ரா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ஆட்டக்கலசம் திரைப்படத்தில் கதாநாயகி ஆனார்.தமிழில் 1991ல் வெளிவந்த புத்தம் புது பயணம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருப்பார்.மேலும் சித்ரா ஊர்க்காவலன்,சேரன் பாண்டியன்,கோபாலா கோபாலா,மதுமதி,பொண்டாட்டி ராஜ்யம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சித்ரா குணச்சித்திரம், நகைச்சுவை ஆகிய கதாபாத்திரங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துபவர்.திருமணமானதால் திரைப்படங்கள் நடிக்காமல் சினிமாவில் ஒதுங்கி இருந்தார் இவர்.அதனால் இவர் சின்னத்திரையில் நடித்து வந்தார்.மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சின்னத்திரையில் நடித்து வந்தார்.சித்ரா பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.அதற்குப்பின் திரைப்பட வாய்ப்புகள் வந்ததால் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.இவருக்குத் திருமணமாகி மகாலட்சுமி என்கிற மகள் உள்ளார்.
இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.மாரடைப்பின் காரணமாக அவர் வீட்டிலேயே காலமானார்.இவரது மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.