திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ரவி-சங்கீதா தம்பதி. இவர்களுக்கு காசியப்பன் என்ற 1 வயது மகன் . கடந்த வியாழக்கிழமை காலை சங்கீதா தனது வீட்டில் அடுப்பில் பாலை காய்ச்சி இறக்கி வைத்தார். அப்போது யாரோ அழைத்த சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்றார். அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை காசியப்பன் கண்விழித்து எழுந்தான். பின்னர் தவழ்ந்து வந்து சூடான பாலை இழுத்ததில் உடலில் பால் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை அலறி துடித்தான்.
பின்னர் காசியப்பனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை காசியப்பன் பரிதாபமாக இறந்து போனான்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த கிராமத்து மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற விபத்திற்கு நாம் யார் மீதும் பழி கூற முடியாது என்றாலும் கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.