பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது‌.!!

0
131

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து பாமக தலைவர் ஜி.கே மணி, தேவமணி படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட திமுக எம்.எல்.ஏ நாஜீம், சுயேச்சை எம். எல்.ஏக்கள் சிவா, நேரு ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தனர்.

தேவமணிக்கும், எதிர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சினையில் கூலிப்படையை ஏவி தேவமணி கொலை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகிய நான்கு நபர்களை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், அரிவாள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக மணிமாறன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூலிப்படையினர் உதவியுடன் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனிடையே, கொலையில் தொடர்புடைய மேலும், சிலரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள கலியமூர்த்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous articleவிசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!
Next articleதமிழகத்தில் பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!